Last Updated : 15 May, 2021 08:45 PM

 

Published : 15 May 2021 08:45 PM
Last Updated : 15 May 2021 08:45 PM

பாஜக எம்எல்ஏ.,க்கள் மட்டும் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது: ஆளுநரிடம் திமுக, காங். எம்எல்ஏக்கள், எம்.பி புகார்

புதுச்சேரி

பாஜக எம்எல்ஏக்களை மட்டும் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது. எந்த சட்ட விதிமுறையில் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார் என்று அவர் மீது ஆளுநர் தமிழிசையிடம் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோர் கூட்டாக புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ளிக் கிழமையன்று ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து திமுக புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவர் சிவா, எம்பி வைத்திலிங்கம், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் ஆகியோர் இன்று இரவு புதுச்சேரி ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து பேசினர்.

அவரிடம் அளித்த மனு விவரம்:

"புதுச்சேரியில் ஜனநாயக முறையில் அனைத்து தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ், திமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தலைமை செயலர் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் தலைமை செயலகத்திற்கு அழைத்து கரோனா தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இது தவறானது மட்டுமின்றி, ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அழைத்து ஆலோசனை கேட்பதற்கு யார் தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பித்தது? எந்த சட்ட விதிமுறையின் கீழ் குறிப்பிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து தலைமை செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்? இதுபோல் பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து தலைமை செயலர் ஆலோசனை நடத்துவாரா?

அரசு அதிகாரிகள் மட்டும் முடிவு செய்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற உடனடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தையும் கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும்.

கரோனா நிவாரண நிதி ரூ.4000, நிவாரணப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்க முடிவு செய்து, உடனடியாக வழங்க வேண்டும். ரேஷன் கடைகளைத் திறந்து, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தரமான அரிசியை தலா 20 கிலோ மாதந்தோறும் வழங்க வேண்டும்."என்று குறிப்பிட்டுள்ளது.

மனு கொடுத்த பின்னர் திமுக புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவிபிரமாணம் கூட செய்து கொள்ளாத நிலையில், பாஜக எம்.எல்.ஏ.,க்களை அழைத்து தலைமை செயலர் எப்படி கூட்டம் நடத்தலாம்? இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிற கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் இந்த அரசின் ஆரம்பமே சரியில்லை. இதை சரி செய்ய வேண்டும் என்று துணை நிலை ஆளுனரிடம் கேட்டுக் கொண்டோம்.

அவர்களுக்கு ஆளும் வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களிடம்தான் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி சண்டை நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதற்கு எங்களுக்கு எந்தவிதமான பொறுப்பும் கிடையாது.

எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்கள் வழங்கியுள்ளனர். அதையேற்று அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். தவறுகள் செய்தால் சுட்டிக்காட்டுவோம்.

முதல்வர், அமைச்சர்கள் உத்தரவிட்டால் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து ஆலோசனை நடத்தலாம். அவ்வாறு இல்லாத நிலையில் ஒரு கட்சி எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து தலைமை செயலர் கூட்டம் நடத்தியது தவறு. அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தாலும் தவறுதான். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்டால் இதுபோல் அழைத்து கூட்டம் நடத்துவாரா? இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x