

கேரளாவில் பெய்த கனமழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டவ் தே புயலினால் தமிழக, கேரள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளப் பகுதியில் மழையின் தாக்கம் அதிகம் உள்ளது.
இன்று தேக்கடியில் 79.2மிமீ, மழையும், முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப்பகுதிகளில் 101மிமீ மழையும் பெய்துள்ளது.
இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாய் உயர்ந்துள்ளது. நேற்று வரை விநாடிக்கு 150கனஅடிநீர் வரத்து இருந்த நிலையில் இன்று காலை விநாடிக்கு ஆயிரத்து 388கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 129 அடியாக உயர்ந்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் வெளியேற்றம் 300கனஅடியில் இருந்து 500கனஅடியாக உயர்த்தப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் சிற்றாறுகளில் நீர்பெருக்கு ஏற்பட்டு வைகை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணைக்கு தற்போது 85 கன அடி நீர்வரத்தும், 72 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. தற்போது நீர்மட்டம் 62.60அடியாக உள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.