மதுரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: தனியார் ஆக்ஸிஜன் ஆலைகளை ஆய்வு செய்த வணிகவரித்துறை அமைச்சர் உத்தரவு
தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்த வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அவர்களிடம் மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க உத்தரவிட்டார்.
மதுரையில் நெல்பேட்டை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.
இந்த ஆலைகளில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மதுரைக்கு மட்டுமில்லாது வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இன்று மாலை இந்த ஆலைகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்த ஆலை உரிமையாளர்களிடம், மதுரையில் உள்ள கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து இங்குள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன்பின் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் 55 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அங்கும் கரோனா சிகிச்சை நடக்கிறது.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தாமதமாகிறது. கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல்தான் உயிரிழக்கிறார்கள். அதைத் தடுக்க, மதுரையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
பொதுமக்களுக்கு அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொப்பூரில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடக்கிறது.
ஒரு வாரத்தில் போதுமான ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எந்தளவுக்கு விரைவாக மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட முடியுமோ அந்தளவுக்கு விரைவாக பணிகள் நடக்கின்றன.
கிராமப்புறங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்துவிட்டோம். ஒரிரு நாட்களில் சித்தா மருத்துவமனைகளை கூடுதல் இடங்களில் திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம், ’’ என்றார்.
