Last Updated : 15 May, 2021 08:12 PM

 

Published : 15 May 2021 08:12 PM
Last Updated : 15 May 2021 08:12 PM

விழுப்புரம் அருகே 3 தலித் முதியவர்களைக் காலில் விழவைத்த விவகாரம்: 2 பேர் கைது

விழுப்புரம் அருகே 3 தலித் முதியவர்களைக் காலில் விழவைத்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் திருவிழாவை நடத்தும் விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் ஆட்சியர் அண்ணாதுரை ஒட்டனந்தல் கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முருகன், பாண்டுரங்கன் மகன் லோகநாதன், ராமசாமி மகன் குமரன், ஆதிகேசவன் உள்ளிட்ட 54 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காலனி தரப்பைச் சேர்ந்த ராமசாமி மகன் குமரன் கொடுத்த புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ், கருணாநிதி மகன் கோகுல்ராஜ், ராமசாமி மகன் முத்துகுமரன், ராமலிங்கம் மகன் சீதாராமன், கலியமூர்த்தி மகன் ராமசந்திரன், முருகன் மகன் முத்துராமன், கோவிந்தராஜ் மகன் சூர்யா, இளையபெருமாள் மகன் அய்யப்பன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே ஒரு தரப்பைச் சேர்ந்த கிராமப் பெண்கள், பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலைக் கைவிடச் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x