Published : 15 May 2021 07:20 PM
Last Updated : 15 May 2021 07:20 PM

கரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ரூ.1 கோடி, ஒரு மாத ஊதியம் உதவி: முதல்வர் ஸ்டாலின் நேரில் பெற்றார்

முதல்வர் கோரிக்கை வைத்த கரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அதை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரிடமிருந்து பெற்றார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பேரிடரின் நோய்த்தொற்று ஒருபுறம், பொருளாதார பாதிப்பு ஒருபுறம் அரசு நிர்வாகத்தை வாட்டி வருகிறது. இதை அடுத்து முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்களிடம் தாராளமாக நிதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

“தமிழகம் தற்போது இரண்டு முக்கியமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று கரோனா என்கிற பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிக்கும் முன் முயற்சிகளைத் தமிழக அரசு செய்து வருகிறது.

படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறைக்குக் கூடுதல் பணியாளர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் அவசர செலவீனங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குகள்” என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

முதல்வர் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண கடைநிலை ஊழியர் வரை நிதியுதவி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தனது விருப்ப மானியத்திலிருந்து ரூ.1 கோடியும், தனது ஒரு மாத சம்பளத்தையும் வழங்குவதாகத் தெரிவித்தார். மரபுப்படி முதல்வர் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று நிதியைப் பெற்று நன்றி தெரிவித்தார்.

முதல்வருடன் இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் செயலாளர்-1 உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் அலையில் நிலவும் சிக்கலான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், ஒட்டுமொத்த மனித வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக அரசின் பொறுப்பை ஏற்கும் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் தனது விருப்பப்படி மானியத்திலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார், மேலும் முதல்வரிடம் ஒரு மாத ஊதியத்தைத் தனது சொந்த பங்களிப்பாகவும் பொது நிவாரணத்துக்கு வழங்கினார்.

கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும், தமிழகத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் நிதி தேவைப்படுபவர்களுக்கு உதவவும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ தாராளமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் ஆளுநர் தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்”.

இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x