Last Updated : 15 May, 2021 06:25 PM

 

Published : 15 May 2021 06:25 PM
Last Updated : 15 May 2021 06:25 PM

புதிதாக 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் எனத் தமிழகத்தில் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, தடுப்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 15-ம் தேதி) நடந்தது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் க.ராமச்சந்திரன் (வனத்துறை), அர.சக்கரபாணி (உணவு வழங்கல் துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்குப் பிறப்பித்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

''கோவையில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், குறைந்த அளவு ஆக்சிஜனைப் பயன்படுத்தி சிறப்பாக சிகிச்சை அளித்து நோயாளிகளைக் குணப்படுத்தி வருகின்றன. ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருப்பதைத் தவிர்க்க, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா தொற்றாளர்களை உடனடியாகக் கீழே இறக்கி, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று வகைகளைக் கண்டறிந்து, சிகிச்சைக்குப் பிரித்து அனுப்பும் வகையில் 15 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர், 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 2 ஆயிரம் தொழில்நுட்பப் பணியாளர்கள் என 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்களைக் கூடுதலாகப் பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், கோவை இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்குத் தேவையான எண்ணிக்கையில் பிரித்து அனுப்பப்படுவர்.

மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை முழுமையாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்து கண்காணிப்போம். கோவை அரசு மருத்துவனையில் கரோனாவால் இறந்தவர்களின் உடல்களைக் வைக்கக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x