

கரோனாவால் உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர் பத்மலோசன குமார் (53). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். காகித நிறுவன ஊழியர் குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு கரோனா அறிகுறி இருந்ததை அடுத்து, கடந்த 9ஆம் தேதி தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கரூர் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த 10ஆம் தேதி சேர்ந்தார்.
சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று (மே 15) பத்மலோசன குமார் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர்கள், ஆலையை 15 நாட்கள் மூடவேண்டும். உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர்.
மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.