

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி கரோனானை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளியுடன் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை, உணவு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம்(ராமநாதபுரம்), செ.முருகேசன்(பரமக்குடி), ஆர்.எம்.கருமாணிக்கம் (திருவாடானை), கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) எம்.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, மருத்துவமனை டீன் எம்.அல்லி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மருத்துவமைனயில் கரோனா நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை, உணவு சரியாக வழங்கப்படுவதில்லை என கரோனா நோயாளிகளின் உறவினர்கள் ஆய்வின்போது அமைச்சரிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அமைச்சரும் அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதனையடுத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆட்சியர் அலுவலகத்தில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து மருத்துவம், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சித்துறை, குடிநீர், மின்சார வாரிம் ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துமனையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும், அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து கரோனாவை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா நிவாரண முதல்கட்ட நிதி இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2,07,67,958 குடும்ப அட்டைகளுக்கு ரூ. 4153.39 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 375187 குடும்பங்களுக்கு ரூ.75, 03,74,000 வழங்கப்படவுள்ளது.
மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.