

கோவில்பட்டி அருகே தந்தையை இழந்த நிலையில் தான் சேமித்த பணத்தை மாணவி முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் சண்முகசிகாமணி நகரில் உள்ள நியாய விலைக்கடையில் இன்று கரோனா உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பங்கேற்ற கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பங்கேற்றனர்.
அப்போது அங்கு வந்த, கோவில்பட்டி ராஜிவ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகள் ரிதானா என்ற 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி தான் சேமித்து வைத்த முதல்வரின் கரோனா நிதியாக ரூ.1,970 ரொக்கமாக வழங்கினார்.
அதனுடன் எழுதிய கடிதத்தில், மரியாதைக்குரிய தமிழக முதல்வருக்கு, என்னோட தந்தை மருத்துவ செலவுக்காக, எனது பெற்றோர், கைச்செலவுக்காக தந்த பணத்தை சேமித்து வைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக எனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார்.
நான் சேமித்த பணம் ரூ.1970-ஐ கரோனா நோயாளிகளுக்காக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். என்னை மாதிரி இன்னொரு குழந்தை தந்தையையோ, தாயையோ இழக்காமல் இருக்க பிராத்திக்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார். கரோனா நிதி வழங்கிய சிறுமி ரிதானாவை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பாராட்டினார்.
தூத்துக்குடி சிறுமியின் உதவிக்கரம்:
இதேபோல், தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யா தேவி என்ற சிறுமி தனது பிறந்த நாள் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை கனிமொழி எம்.பியிடம், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.
தூத்துக்குடியில் சிறுமி வருண்யா தேவி, கரோனா நிதியை கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார்.
இது குறித்து, கனிமொழி எம்.பி. கூறுகையில், “தூத்துக்குடி சிறுமி வருண்யா தேவி பிறந்த நாள் செலவுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது. இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது,” என்றார்.