தூத்துக்குடி மாவட்டத்தில் 1,745 கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,745 கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: கனிமொழி எம்.பி. தகவல்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,745 கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு இன்னும் அக்கறை மற்றும் கவனத்தோடு கரோனா 2-வது அலை பிரச்சினையைக் கையாண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்திருக்க வேண்டாம்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறைகளையும் முடுக்கிவிட்டு, கரோனா பாதிப்புகளை எந்தளவுக்கு குறைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்ததெந்த வகையில் உதவிகளை செய்ய முடியும் என்பதையெல்லாம் செய்துக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து இந்தப் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் என்பது ஒரு நாளில் பரவுவதில்லை. இந்தப் பிரச்சினையில் மாதக்கணக்காக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல், தொற்று பரவக்கூடிய சூழல் வந்துவிட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளாத சூழ்நிலையை நாம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

ஆட்சிப்பொறுப்புக்கு வருவதற்கு முன்பே முதல்வர், இந்தப் பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு நாளில் நாம் நோய் தொற்றுப் பரவலை நிறுத்திவிட முடியாது. அதனால் தான் இப்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை நாள் லகுவாக இருந்த ஊரடங்கு விதிமுறைகள், தற்போது கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பொதுமக்கள் கரோனா தடுப்பூசி காட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி எடுக்க வேண்டும். இதில், மக்களுக்கு ஒரு தயக்கம் உள்ளது. மக்களின் பாதுகாப்பு என்பது தடுப்பூசி எடுத்துக்கொள்வது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,745 கிராமங்களுக்கு நேரடியாக மருத்துவ, சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுக்கள் சென்று, முகாம் அமைத்து, அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் முன் வர வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அதிகரித்து, அதில் ஆக்சிஸன் பொருத்துவதற்குமான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது இல்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம். இந்த விமர்சனங்களை பாஜகவினர், அவர்களது தலைவர்கள் நோக்கி செய்திருந்தால் இன்று நாடு காப்பாற்றப்பட்டிருக்கும்" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in