Published : 15 May 2021 04:02 PM
Last Updated : 15 May 2021 04:02 PM

5 கோடி தடுப்பூசிகள் வாங்குகிறது தமிழக அரசு: 90 நாட்களில் சப்ளை செய்ய உலகளாவிய டெண்டர்

சென்னை

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவெடுத்த தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. 5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகம் உள்ளது. மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மே.1 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த திட்டம் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாநில அரசுகள் தனது தேவைக்கேற்ப வெளியில் கொள்முதல் செய்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து தடுப்பூசி தேவைக்காக கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே 12 அன்று தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக்கூட்டத்தில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள அடிப்படையில் தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதன்படி தமிழக அரசின் தடுப்பூசி தேவைக்காக தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மூலம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதன்படி 5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை சப்ளை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x