

இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக ஓசூர் எல்லையிலும் கரோனா இ-பாஸ் வாகனச் சோதனை தீவிரமடைந்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இருமாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச் சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இந்த சோதனைச் சாவடிக்குத் தினமும் கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு நகர் வழியாக தமிழகத்துக்குள் வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முதல் முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தமிழக எல்லையில் முதல் முறையாக இ-பாஸ் முறை அமல் படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரண்டாம் முறையாக தமிழக எல்லை மூடப்பட்டு ஜுஜுவாடியில் கரோனா தடுப்புச் சோதனை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் முதல்கட்டமாக கர்நாடகா, ஆந்திரா , புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநில வாகனங்களைத் தவிர்த்து இதர மாநில வாகனங்களுக்கு இ - பாஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் கரோனா அதிகரிப்பு தொடர்பாகக் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதே நாளில் தமிழகத்துக்குள் வரும் கர்நாடகா, ஆந்திரா உட்பட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு, அன்று முதல் தமிழக ஓசூர் எல்லையில் 24 மணி நேரமும் இ-பாஸ் சோதனை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழக ஓசூர் எல்லையிலும் கரோனா இ-பாஸ் வாகன சோதனை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தமிழக எல்லை ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய காவல் அதிகாரி கூறும்போது, ’’இந்த இ-பாஸ் சோதனைச்சாவடியில், ஏப்ரல் 27-ம் தேதி இரவு 9 மணி முதல் தமிழகத்துக்கு வரும் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வெளி மாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சோதனைச்சாவடியில் இ-பாஸ் இல்லாதவர்கள், அதற்காக விண்ணப்பித்து சுமார் 20 நிமிடத்தில் இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.