

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 3 பேர் காலில் விழுவது போன்ற புகைப்படங்களும், வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஏடிஎஸ்பி தேவநாதன், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோரை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதுகுறித்து எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ’’கடந்த 12ஆம் தேதி ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி கோயில் திருவிழா நடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் அரசின் உத்தரவைச் சுட்டிக்காட்டி திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்று மாலை அப்பகுதி இளைஞர்கள் சிலர், வேனில் இருந்தபடியே பாடும் இசைக் குழுவினரை வரவழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதனை அறிந்த போலீஸார் இசைக் கருவிகளை எடுத்து வந்தனர். இதையடுத்து காலனி தரப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரிடம், தங்களால் இசைக் குழுவினர் பாதிக்கப்படவேண்டாம் என்றும் அவர்களின் இசைக் கருவிகளைக் கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டதால் அவற்றை போலீஸார் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.
மறுநாள் காலனியைச் சேர்ந்தவர்கள், திருவிழாவிற்காகச் செய்த செலவு வீணாகிவிட்டது. ஏன் இப்படி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தீர்கள் என்று புகார் அளித்தவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவித்தவர் கிராமப் பஞ்சாயத்திடம் கூற, பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
அப்போது தாங்கள் செய்தது தவறுதான் எனக் காலனியைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் வாயால் சொன்னால் போதாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து காலனி தரப்பில் இருந்து பெரியவர்கள் 3 பேர், பஞ்சாயத்தின் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறியதால் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்த வீடியோ நேற்று (14ஆம் தேதி) வைரலானது. இதையடுத்து இரு தரப்பினர் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றபடி அங்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லை’’ என்று எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.