

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா முதற்கட்ட நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று (மே 15) நடைபெற்றது.
மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கிப் பேசும்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள 3,11,511 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதற்கட்ட கரோனா நிவாரண நிதி வழங்க ரூ.62.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜோதீஸ்வரன் தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த 5,000 ரூபாயை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியிடம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். கரோனா தடுப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு மாணவர் விரும்பியதை நாங்களே வாங்கி வழங்குவோம் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
டிஎன்பிஎல்லில் 250 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி
கரூர் ஆண்டாங்கோவில் புதூரில் நடந்த நிகழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கியபின் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) 250 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். இதற்கான இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்பட உள்ளன. இதற்கு ஜூன் 2 அல்லது 3-வது வாரமாகிவிடும். முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியருடன் தற்போது ஆய்வு செய்ய உள்ளேன்.
மாவட்டத்தில் வேறு எந்தத் தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலே அரசு முழுக் கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்டமாக 5 திட்டங்களுக்கு முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்டவற்றுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்”.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.