

கோவிட் நோயாளிகள் உதவி கேட்பு மையமான கரோனா கட்டளை மைய அறையை நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் தானே நேரடியாக உதவி கேட்ட பெண்ணிடம் பேசி அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக நாள்தோறும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதும், ஆக்சிஜன் வசதிகள் கிடைப்பதும், நோய்காக்கும் மருந்துகள், மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவை குறித்து அறிய தமிழக அரசால் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (War Room) உருவாக்கப்பட்டது.
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கரோனா கட்டளை மையம் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தனது பணி முடிந்து இல்லம் திரும்புகையில் நேற்றிரவு 10.30 மணி அளவில் திடீரென ஒருங்கிணைந்த கரோனா கட்டளை மையத்தை ஆய்வு செய்தார். அப்போது அது செயல்படும் விதத்தை அங்குள்ள அலுவலர்கள் அவருக்கு விளக்கிக் கூறினர்.
அப்போது உதவி கேட்டு ஒரு போன் கால் வந்தது. அதை முதல்வர் ஸ்டாலினே நேரடியாக எடுத்துப் பேசினார். நான் ஸ்டாலின் பேசுகிறேன் நீங்க யாரும்மா என்று கேட்டார். மறுமுனையில் பேசிய பெண், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க உதவி கோரினார். வானகரத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணின் அழைப்பை எடுத்துப் பேசி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்குப் படுக்கை வசதி செய்து தர ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதேபோன்று நுங்கம்பாக்கத்திலிருந்து அர்ச்சனா என்ற பெண் தனது உறவுப்பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கரோனா கட்டளை மையத்தை அழைக்க, அவரது அழைப்பை எடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அவரது குறைகளைக் கேட்டு அவருக்கான சிகிச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதுகுறித்து முதல்வருடன் பேசிய அர்ச்சனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் போன் செய்தவுடன் மறுமுனையில் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என முதல்வர் பேசினார்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் பேசியது எனக்குப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் படபடப்பாக என் குறையைச் சொன்னேன். பதற்றப்படாதீர்கள் என்று சொல்லி குறை என்ன என்று கேட்டார். நான் என் உறவுப் பெண்ணுக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் ஆக்சிஜன் படுக்கை வேண்டும் எனக் கேட்டேன். அவர் ஏற்பாடு செய்து தந்தார்” என்று கூறினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.
#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த குழப்பங்களைச் சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாகப் பயணிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.