Last Updated : 12 Dec, 2015 08:23 AM

 

Published : 12 Dec 2015 08:23 AM
Last Updated : 12 Dec 2015 08:23 AM

தலைவர்களையும் தவிக்கவைத்த மழை வெள்ளம்: படகில் சென்று மீட்ட தொண்டர்கள்

சென்னையில் பெய்த மழை, வெள்ளம் அரசியல் கட்சித் தலை வர்களையும் விட்டுவைக்க வில்லை. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் தவித்த தலைவர்களையும், அவர்களது குடும்பத்தினரை யும் கட்சித் தொண்டர்கள் படகுகள் மூலம் மீட்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1-ம் தேதி விடாமல் கனமழை கொட்டியது. அன்று இரவு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால், அடையாறு ஆற்றில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரை யோரத்தில் இருந்த வீடுகளில் முதல் மாடி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் சிக்கினர். கட்சித் தொண்டர்கள்தான் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இதுபற்றிய விவரம்

என்.சங்கரய்யா:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யாவுக்கு 94 வயதாகிறது. குரோம்பேட்டை நியூ காலனியில் வசிக்கிறார். கடந்த 2-ம் தேதி அவரது வீட்டின் தரைதளத்தில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, அருகே உள்ள உறவினரின் வீட் டுக்கு அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். நடக்க முடி யாத அவரது மனைவியை தொண் டர்களும், உறவினர்களும் நாற் காலியில் அமரவைத்து மீட்டனர்.

ஆர்.நல்லகண்ணு:

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சைதாப்பேட்டை சிஐடி நகரில் வசிக்கிறார். கடந்த 2-ம் தேதி இவரது வீட்டில் மழைநீர் புகுந்தது. போன், செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால், கட்சியினர் உட்பட யாரும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, அவரை படகில் மீட்பதற்காக கட்சித் தொண்டர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சென்றனர். ‘மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டால்தான் வருவேன்’ என பிடிவாதமாக கூறியுள்ளார். மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள் என சமாதானப்படுத்திய பிறகு, அவரை படகில் ஏற்றி பேரன் வீட் டில் கொண்டுபோய் சேர்த்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு மணப்பாக்கத்தில் உள்ளது. கடந்த 2-ம் தேதி அவரது வீட்டில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. இளங்கோவன் டெல்லி சென்றிருந்த நிலையில், வீட்டில் அவரது மனைவியும், வீட்டுப் பணியாளர்களும் மாடியில் செய் வதறியாது நின்றனர். தகவல் அறிந்த அப்துல் சமது என்ற காங்கிரஸ் நிர்வாகி 2 மீனவர்களு டன் மோட்டார் படகில் சென்று அவர்களை மீட்டார். அருகில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி குடும்பத் தினரையும் காங்கிரஸார் மீட்டனர்.

இதுகுறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘வீட்டின் தரைதளத்தில் இருந்த எல்லா பொருட்களும் நாசமாகிவிட்டன. என் தந்தை ஈவிகே சம்பத் சேகரித்து வைத்திருந்த 5 ஆயிரம் அரிய புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை’’ என்றார் வேதனையுடன்.

தமிழிசை சவுந்தரராஜன்:

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீடு சாலிகிராமத்தில் உள்ளது. கடந்த 2-ம் தேதி காலை இவரது வீட்டின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்தது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் இவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், மகன், மகள் மூவரும் படகுகள் மூலம் மருத்துவப் பணிக்கு சென்றிருந்தனர். இதற்கிடையில், ஈக்காட்டுத்தாங்கலில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனது தாயை படகு மூலம் மீட்டு வந்தார் தமிழிசை.

இல.கணேசன்:

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வீடு மேற்கு மாம்பலத்தில் உள்ளது. அவரது வீட்டிலும் வெள்ளநீர் புகுந்தது. அவரை படகு மூலம் மீட்ட கட்சித் தொண்டர்கள், பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x