

அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (மே 15) 'டவ் தே' புயலாக வலுப்பெறும். அதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் மாலை ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அது இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும். இப்புயலுக்கு 'டவ் தே (Tau te)' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை மியான்மர் நாடு பரிந்துரைத்துள்ளது.
இந்த புயல் காரணமாக 15-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
16, 17 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 18-ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.
குழித்துறையில் அதிக மழை
வெள்ளிக்கிழழை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறையில் 9,தக்கலையில் 8, கரூர் மாவட்டம்அரவக்குறிச்சியில் 7, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக 15-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், 16-ம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.