நாமக்கல் செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உயர் நீதிமன்றத்தில் உறுதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயகுமாரி என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றபோது விஜயகுமாரி, அப்பெண்ணை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது குடும்பத்தினருடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இரு மாதங்களுக்குப் பிறகு கிராமத்துக்கு மருத்துவ ஆய்வுக்கு சென்ற செவிலியர் விஜயகுமாரி மீது, மணிகண்டனும், அவரது நண்பர் விஜயகுமாரும் சேர்ந்து ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் விஜயகுமாரி பலத்த காயமடைந்துள்ளார்.

இதுதொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடந்த 2020-ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மணிகண்டனும், விஜயகுமாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், பாதிக்கப்பட்ட செவிலியர் மீது ஆசிட் வீசினால் காயம் ஏற்படும் என்றும், மரணம் ஏற்படும் என்றும் தெரிந்தே இருவரும் ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். எனவே இருவருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்கிறேன், எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in