

நேரு விளையாட்டு அரங்கில் இன்றுமுதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படவுள்ளது.
கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது.
இங்கு கூட்டம் அதிகரித்ததால், சில தினங்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் மருந்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பணிகள் நிறைவடையாததால் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து விற்பனை நடைபெற்றது.
நேற்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் இன்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கவுள்ளது. நாளொன்றுக்கு 300 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.