Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

மயானங்களுக்கு வரும் சடலங்கள் அதிகரிப்பதால் - வேலைப்பளு, மன அழுத்தத்தால் அவதிக்குள்ளாகும் பணியாளர்கள்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழப்பதால், மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் மாநகராட்சி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மிகுந்த வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னையில் தற்போது 68 இடங்களில் மயானங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மயானம் தவிர மற்ற இடங்களில் உள்ள மயானங்களில் நவீன தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது தனியாரின் பராமரிப்பில் உள்ளன. அந்த மயானங்களில் அனைத்து உடல்களும் இலவசமாக எரியூட்டப்பட்டு வருகின்றன. ஒரு உடலை தகனம் செய்ய மாநகராட்சி ரூ.750 செலுத்துகிறது.

சென்னை மாநகரில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துவிட்ட நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வெளி மாவட்டங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களும் அடங்குவர்.

இவ்வாறு கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களிடம் அரசு ஒப்படைப்பதில்லை. அவர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள மயானங்களில் அவை தகனம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் உள்ள மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலங்காடு, வில்லிவாக்கம், திருவொற்றியூர், மூலக்கொத்தளம், பெசன்ட் நகர், வியாசர்பாடி முல்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள மாயனங்களுக்கு தினமும் 15-க்கும் மேற்பட்ட சடலங்கள் வருகின்றன.

அதிக எண்ணிக்கையில் சடலங்கள் வருவதால், மயான பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அதிக வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக மயானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது:

இதற்கு முன்பு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 அல்லது 6 சடலங்கள் வரும். தற்போது ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட சடலங்கள் வருகின்றன. எங்கள் வாழ்நாளில் இதுவரை இப்படி நடந்ததில்லை.

நாங்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்தால், வீட்டுக்குச் செல்ல இரவு 11 மணி ஆகிறது. அது தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்து மண்டல அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய பணிகளையும் செய்து வருகிறோம். பெரும்பாலான மயானங்களில் தலா ஒரு இயந்திரம்தான் நிறுவப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு நாளொன்றுக்கு 10 சடலங்களை தகனம் செய்யலாம்.

ஆனால் அதிகாரிகள் பலர், அதிகாரிகளின் உறவினர், முக்கிய அரசியல்வாதி என பரிந்துரை செய்து, அந்த சடலங்களை தகனம் செய்ய முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்துகின்றனர். எங்களுக்கான வசதியை செய்து கொடுக்காத அதிகாரிகள், இருக்கும் இயந்திரங்களைக் கொண்டு அதிக சடலங்களை எரிக்க அறிவுறுத்துகின்றனர். இது எங்களுக்கு கடும் வேலைப் பளுவையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

போதிய கட்டமைப்பு இருந்தும், புதிய இயந்திரத்தை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. பார்வையிட வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் களப் பணியாளர்களிடம் பேசுவதில்லை. உடன் வரும் பொறியியல் அதிகாரிகளே, அவர்களுக்கு தெரிந்ததை விளக்கிவிட்டு, ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.

நாங்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பலரின் சடலங்களைக் கையாள்கிறோம். தூய்மைப் பணியாளர்களைப் போல எங்களுக்கு உணவு அளிப்பதில்லை. 3 வேளையும் சொந்த செலவில் ஓட்டலில் வாங்கி சாப்பிட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மயானங்களில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x