

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில், வழக்கம்போல் பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் கும்பலாக பங்கேற்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் புதுச்சேரியையொட்டிய வானூர், விக்கிரவாண்டி வட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது.
கடந்த 3-ம் தேதி முதல் நேற்று முன் தினம்வரை 4,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பாதிப்பாக நேற்று முன்தினம் 572 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பில் 26 சதவீதம் நகராட்சிகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 74 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகைக் கடைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் தடுப்புக் கட்டைகள் அமைத்து இத்தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால்வீட்டுடன் உள்ள கடைகளில் மட்டும் வழக்கம் போல வியாபாரம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகளில் வெளியே தொடர்பு எண்கள் தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் இந்த எண்ணை தொடர்புகொண் டால், அவர்கள் கேட்கும் நகைகள் டோர் டெலிவரி செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக் கின்றனர்.
கிராமப்புறங்களில் கரோனா வழிகாட்டு நெறிகளை துளியும் கடைபிடிப்பதில்லை. வானூர் அருகே கிளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதில் தனிமனித இடைவெளியின்றி ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கிராமங்களில் திருமணத்திற்கு முந்தையநாள் இரவு நடைபெறும் பெண் அழைப்பு எனப்படும் நிகழ்ச்சிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம் என வழக்கமான உற்சாகத்துடன் சுமார் 500 பேருக்கு மேல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை காவல் துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் கண்டும் காணாமல் கடக்கின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.