

கரோனாவால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பார்வை இழப்புக்கு வழி வகுக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் உஷாகிம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று அரிதாக ஏற்படும் ஆபத்து உள்ளது. நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பூஞ்சை பாதிப்பு உண்டாகும். இது தற்போது கரோனா தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.
மதுரை அரவிந்த் மருத்துவ மனைக்கு ஓராண்டில் வரும் கருப்பு பூஞ்சை நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு, தற்போது ஒரு வாரத்திலேயே வருகின்றனர். இந்நோய் தாக்குதல் இருந்தால் கண் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வலி, முகத்தில் வலி, கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் நிறம் மாற்றம், திடீர் பார்வை இழப்பு, கண் வீக்கம், கருவிழி துருத்திக் கொள்ளுதல், அசையாமல் இருத்தல், கருப்பு நிறப் புண், மூக்கில் நீர் அல்லது ரத்தம் வடிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
கரோனாவில் இருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர் களுக்கும் பூஞ்சை நோய் ஏற் படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது சர்க்கரை அளவு அதிகரிக்கும். கரோனா தீவிரம் அல்லது சிகிச்சைக்கான மருந்தால் கரோனா வைரஸ் கணையத்தை பாதிக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது. கரோனா பாதிப்புக்கு பயமின்றி சிகிச்சை செய்து கொண்டால் ரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உயர்வால் உயிரிழப்பு ஏற்படுகிறது. தொற்றிலிருந்து மீண்டாலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியம் என்றார்.