

கொட்டிவாக்கம் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான கார் குளத்தில் மூழ்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டது.
நீலாங்கரையைச் சேர்ந்த சிங்காரவேலன் சாலையைச் சேர்ந்தவர் பாண்டியன். சொந்த காரை வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் இவர் தனது மனைவி, பிளஸ்-1 படிக்கும் மகள் பவித்ரா மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் பவித்ரா (17) ஆகியோருடன் திருவான்மியூரில் உள்ள திரையரங்கில் படம் பார்த்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை பல்கலைக்கழக குடியிருப்பு சிக்னல் அருகே சென்றபோது காரில் பெட்ரோல் குறைவாக இருப்பதை அறிந்த பாண்டியன், கொட்டிவாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் காரை திருப்பினார். சாலைகள் சரியாக இல்லாததால் பெட்ரோல் பங்க் நோக்கி காரை அவர் மெதுவாகவே ஓட்டினார்.
அப்போது கிழக்கு கடற்கரைசாலை மார்கமாக பாண்டிச்சேரியிலிருந்து இருந்து சென்னை நோக்கிச் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் விபத்துக்குள்ளான கார் கட்டுப்பாட்டை இழந்த குளத்தினுள் பாய்ந்தது. உடனடியாக பாண்டியன் தனது கார் கதவை திறந்து வெளியே வந்து விட்டார்.
குளத்தில் கார் முழுவதுமாக கவிழ்ந்த நிலையில் பாண்டியனின் மனைவி மற்றும் 2 மகள்களும் கதவை திறந்து வெளியே வர முடியாமல் போனது. விபத்து குறித்து அறிந்ததும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரும் குளத்தில் காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குளத்தில் காரோடு மூழ்கி பாண்டியனின் மனைவி மற்றும் 2 மகள்களும் இறந்தது தெரியவந்தது.
பலியான 3 பேர் உடலையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்தி சென்று பேருந்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.