

திருச்சி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காலிப்படுக்கைகள் விவரத்தை தெரிவிக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணை வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்துக்கு கரூர் எம்.பி எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன், எஸ்.கதிரவன், பி.அப்துல் சமத், அரசின் நிதித் துறை சிறப்புச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரீட்டா ஹரிஸ் தாக்கர், மாநகர காவல் ஆணையர் ஏ.அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், செய்தியாளர் களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த விவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் அந்தப் பிரிவைத் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்கள் உடனடியாக பணியமர்த்தப்படவுள்ளனர்.
தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 7,000 குப்பி மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படுகிறது. அதில், திருச்சி உள்ளிட்ட சுற்றுப் பகுதி மாவட்டங்களுக்கு 300 குப்பி வழங்கப்படுகிறது.
ரெம்டெசிவிர் பற்றாக்குறையை களைய உரிய நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார். கரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது. ரெம்டெசிவிர் மருந்து விற்பனை முறைப்படுத்தப்படும்.
காந்தி மார்க்கெட் விவகாரம்
காந்தி மார்க்கெட் பிரச்சினை தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் பேசி விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும்.
மேலரண் சாலையில் மரக்கடையில் இருந்து காமராஜர் வளைவு வரை காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை சமூக இடைவெளியுடன் கடைகளை நடத்த அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்றார்.