

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கன மழையால் ஆறுகள், கால்வாய்கள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக இரணியலில் 28 செ.மீ.,மழை பதிவானது.
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்று வருவதால் குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் சூறைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டத் தொடங்கியது. நேற்று காலை வரை மழை நீடித்தது. பின்னர் பகலிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
28.செ.மீ. பதிவானது
அதிகபட்சமாக இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. இந்த ஆண்டு பெய்த அதிக பட்ச மழை இதுவாகும். குருந்தன்கோட்டில் 120 மிமீ., கோழிப்போர்விளையில் 115, முள்ளங்கினாவிளையில் 108,ஆனைகிடங்கில் 88, குழித்துறையில் 108, பேச்சிப்பாறை, களியலில் தலா 85 , மாம்பழத்துறையாறில் 87, தக்கலையில் 82, சிற்றாறு ஒன்றில்78, கன்னிமாரில் 35, மைலாடியில் 50, நாகர்கோவிலில் 65, பெருஞ்சாணியில் 56, புத்தன்அணையில் 55, சிவலோகத்தில் 67, சுருளகோட்டில் 54, குளச்சலில் 26, பாலமோரில் 32, அடையாமடையில் 39, முக்கடல் அணையில் 33 மி.மீ. மழை பதிவானது.
அணைகள் நிலவரம்
பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,112 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 42.13 அடியாக உள்ளது. அணையில் இருந்து 173 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 537 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 55.75 அடியாக உயர்ந்தது. சிற்றாறு ஒன்றில் 8.53 அடி,சிற்றாறு இரண்டில் 8.62 அடி,பொய்கையில் 16.80 அடி, மாம்பழத்துறையாறில் 21.93 அடி தண்ணீர் உள்ளது. முக்கடல் அணையில் நீர்மட்டம் மைனஸ் அளவை எட்டியிருந்த நிலையில் தற்போது அணைக்கு 3 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் நீர்மட்டம் 1.2 அடியாக உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2,040 பாசனக் குளங்கள் நிரம்பின. கோடைக் காலத்தில் அதிகளவு பெய்த மழையால் கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தமாகி வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால் மழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆற்றின் கரையில் உடைப்பு
கனமழையால் கிள்ளியூரை அடுத்துள்ள பரக்காணி தடுப்பணை அருகே வைக்கல்லூர் பகுதி ஆற்றின் கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீர் கிராமத்துக்குள் புகாதவாறு பொதுப்பணித்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சேதம் அடைந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பரவலாக கோடை மழை பெய்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 29, சேர்வலாறு- 9, மணிமுத்தாறு- 2.4, கொடுமுடியாறு- 18, சேரன்மகாதேவி- 9, ராதாபுரம்- 8.6, களக்காடு- 6.2, மூலைக்கரைப்பட்டி- 40, நாங்குநேரி, அடவிநயினார் அணை மற்றும் தென்காசி தலா 10, குண்டாறு அணை 7, செங்கோட்டை 3, கருப்பாநதி அணையில் 1.50 மழை பதிவானது. சுரண்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்டபாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 100 அடியாக இருந்தது. அணைக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.22 அடியாக இருந்தது. 5 கனஅடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. நேற்று முன்தினம் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இரவில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை. அடவிநயினார் அணை தொடர்ந்து வறண்ட நிலையில் உள்ளது.கடனாநதி அணை நீர்மட்டம்65.90 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், குண்டாறு அணை 28.50 அடியாகவும் இருந்தது.
தூத்துக்குடியில் பலத்த காற்று: பல இடங்களில் மின்தடை
“தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16-ம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயலுக்கு ‘டவ்-தே’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்” என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் ஏற்கெனவே கடலுக்கு செல்லாத நிலையில், நாட்டுப் படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மதியத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஆனால் மாலை வரை மழை ஏதும் பெய்யவில்லை. இந்நிலையில் பகல் 1 மணியளவில் தூத்துக்குடி பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது.
பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், நகரின் பல பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது.