

அப்போலோ மருத்துவமனை தங்களது கோவிட் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் தொலைபேசி மூலம் மருத்துவர்கள், நர்சிங் ஹோம்களுக்கு இலவச ஆலோசனை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சிகிச்சை குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை இலவசமாக வழங்கும்.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“அப்போலோ மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகள் குறித்து தீவிரப் பராமரிப்பு நிபுணர்களின் (COVID Critical Care experts) ஆலோசனைகளைப் பொதுநல மருத்துவர்களும் சிறு நர்சிங் ஹோம்களும் (General Physicians & Nursing Homes) எவ்விதக் கட்டணமும் இல்லாமல் தொலைபேசி அழைப்பின் மூலம் (Free Tele-Access facility) இலவசமாகப் பெற உதவும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசி மூலம் அணுகும் இந்த இலவச வழிகாட்டுதல் வசதியானது, பொதுநல மருத்துவர்களும், நர்ஸுகளும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நிரூபணமான சிறப்பான தீர்வு அளிக்கும் மருத்துவ நடைமுறை குறித்த வழிகாட்டுதல் ஆலோசனையைப் பெற்று சரியான நேரத்தில் சிறப்பாக சிகிச்சை அளிக்க உதவும்.
மேலும், அப்போலோ மருத்துவமனைகளில் அனுபவம் மிக்க கோவிட் தீவிர பராமரிப்பும் சிகிச்சை நிபுணர்களுடன் பொதுநல மருத்துவர்களும், சிறு நர்சிங் ஹோம்களும் தொலை தொடர்பு வசதி மூலம் கோவிட் பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்த சரியான ஆலோசனைகளைப் பெற முடியும்.
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி இதுகுறித்துக் கூறியதாவது:
“கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் கோவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை முறைப்படி சிகிச்சை அளித்து நிர்வகிப்பதற்கான தேர்ச்சி பெற்ற மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கிறது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இன்னும் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அப்போலோ மருத்துவமனை, தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளது. இந்த புதிய முன்முயற்சியின் மூலம் சிறந்த மருத்துவ நடைமுறைகளில் எங்களது அனுபவத்தைப் பொதுநல மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஹோம்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
இதனால் தீவிரப் பராமரிப்பின் உயர்நிலை சிகிச்சைகள் குறித்து முழுமையான புரிதல் மற்றும் வழிமுறைகள் தெரியாதவர்களுக்கு எங்களது முயற்சி சிறப்பாக சிகிச்சை அளிக்க உதவும். இதுவரை தீர்வுகள் நிரூபிக்கப்படாத தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கும் மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் பின்பற்றுவதைத் தவிர்க்க உதவும். அதே நேரம் வீட்டில் அல்லது சிறிய நர்சிங் ஹோம்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிரூபணம் ஆன தீர்வுகளை வழங்கும் சரியான சிகிச்சையை சரியான நேரத்தில் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.
இது நோயின் தீவிர வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மருத்துவப் படுக்கைகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தேவைக்கு ஏற்றது போல் திறம்பட கையாள வழிவகுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்”
இவ்வாறு பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த தேர்ச்சி பெற்ற மருத்துவ சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களின் பற்றாக்குறையானது கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். நிரூபணம் ஆகாத சிகிச்சை முறைகளின் அவசியம் சுட்டிக்காட்டப் படாவிட்டாலும் கூட பரிந்துரைக்கப்படும் சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் இதுபோன்ற தவறான மருத்துவ நடைமுறை, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை இல்லாததால் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
உதாரணத்திற்கு மருத்துவமனையில் சிறிதளவு ஆக்சிஜன் தேவைப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிட் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தின் பங்கு வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூட அதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக பயன்படுத்த ஆரம்பித்தது, நோயாளிகளின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, சுகாதார சமூகத்திடம் தேவையற்ற அழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அதோடு அம்மருந்துக்கும் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையின் ஆரம்ப நிலையில் ஸ்டீராய்டுகளின் பொருத்தமற்ற பயன்பாடு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் காரணிகளில் ஒன்றாக ஆகியுள்ளது. மேலும், அதிகரித்து அதிகரித்துவரும் மியூகோர்மைகோஸிஸ் [Mucormycosis] போன்ற பூஞ்சைத் தொற்றும் இதில் அடங்கும்.
தொலைபேசி மூலம் மருத்துவ நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கும் முயற்சியானது மேம்பட்ட கோவிட் மருத்துவ பராமரிப்பு குறித்து நிபுணர்களின் ஆலோசனைகளை, கருத்துகளை ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெற முடியும். இதன் மூலம் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை எவ்வாறு சிறப்பாகத் தொடரலாம் என்பது குறித்து மருத்துவர்கள் வழிகாட்டும் முயற்சியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் அப்போலோ மருத்துவமனையின் தீவிரப் பராமரிப்பு நிபுணர்கள் தமிழக ஐஎம்ஏ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு (Tamil Nadu IMA community) கோவிட் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை, சேவைகளை வழங்கும். இந்த நோக்கத்திற்காக ஒரு சிறப்பு ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஹோம்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொலைபேசியில் அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www.apollohospitals.com இணையதளத்தைப் பார்க்கலாம்”.
இவ்வாறு அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.