Last Updated : 14 May, 2021 07:24 PM

 

Published : 14 May 2021 07:24 PM
Last Updated : 14 May 2021 07:24 PM

விவசாய நிலத்தில் டிராக்டருடன் செல்ஃபி; இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு- வாணியம்பாடி அருகே சோகம்

வாணியம்பாடி அருகே நிலத்தில் டிராக்டர் ஓட்டுவதைப் போல செல்போனில் செல்ஃபி எடுத்து அதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்த இளைஞர், சற்று நேரத்தில் அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (47). இவரது மகன் சஞ்சீவி (19). கேட்டரிங் படித்து வந்த சஞ்சீவி கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தார். இந்நிலையில், தனது வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்துக்கு சஞ்சீவி இன்று நண்பகலில் சென்றார்.

அப்போது, ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சவுந்தர் என்பவர் டிராக்டரில் ஏர் உழுது கொண்டிருந்தார். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சீவி, தனது செல்போனில் அதை வீடியோ எடுத்தார். நண்பகல் 1 மணியளவில் உணவு இடைவெளி நேரம் என்பதால் சவுந்தர் டிராக்டரை நிலத்தில் நிறுத்திவிட்டு, அதன் சாவியை எடுக்காமல் சென்றார்.

உடனே, டிராக்டரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி சஞ்சீவி தனது செல்போனில் படம் எடுத்து, அதைத் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து மகிழ்ந்தார். பிறகு, சாவியை ஆன் செய்து டிராக்டரை அவர் இயக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், விவசாய நிலத்தில் தறிகெட்டு ஓடி அங்கிருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. டிராக்டருடன் சஞ்சீவியும் உள்ளே விழுந்தார்.

சத்தம் கேட்டு அங்கிருந்த விவசாயக் கூலித்தொழிலாளிகள் ஓடி வந்தனர். கிணற்றில் டிராக்டருடன் இளைஞர் விழுந்ததை அறிந்த கிராம மக்கள் கூச்சலிட்டனர். 120 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் 35 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் சஞ்சீவியைக் காப்பாற்றுவது சிரமம் என உணர்ந்த அப்பகுதி மக்கள், அம்பலூர் காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்க முயன்றனர். அது முடியாமல் போகவே, மின் மோட்டார்களைக் கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். பிறகு கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர், சுமார் 5 மணி நேரம் போராடி சஞ்சீவியைச் சடலமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்தவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவர்களது உறவினர்கள் உடலை ஒப்படைக்கக் கோரி ஆம்புலன்ஸ் வாகனம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களைச் சமாதானம் செய்த காவல்துறையினர், சஞ்சீவியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்பிறகு ஒரு மணி நேரம் கழித்து பொக்லைன் உதவியுடன் கிணற்றில் விழுந்த டிராக்டரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். டிராக்டருடன் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டதும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சின்ன மோட்டூர் பகுதியில் திரண்டனர்.

கரோனா விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்ட கிராம மக்கள் கிணற்றைச் சுற்றி நின்று சிறுவன் உடலை மீட்பதை வேடிக்கை பார்த்தனர். இந்தச் சம்பவத்தால் கரோனா பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x