

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநிலச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மூலிகை பயிர் தோட்டம், உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்டவற்றை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (மே 14) ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"ஆலங்குடி அரசு மருத்துவமனையில் குடிநீர் தேவைக்காக கூடுதலாக ஆழ்துளைக் கிணறு, கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு, 50 படுக்கைகளுடன் கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஓரிரு தினங்களில் கூடுதலாக நியமிக்கப்படுவர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளுங்கள்.
பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பது நல்லது. கோடையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை".
இவ்வாறு சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
முன்னதாக, அறந்தாங்கி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, கோட்டாட்சியர் டெய்சிகுமார், மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.