

‘‘கரோனா தொற்றைத் தடுக்க மதுரைக்கு கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படும். ரெம்டிசிவிர் பற்றாக்குறையைப் போக்க ஓரிரு நாட்களில் கூடுதல் மருந்துகள் வழங்கப்படும், ’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை மதுரையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு, அதைத் தடுப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்பி. சு.வெங்கடேசன், ஆட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கரோனாவை மதுரையில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தங்கள் ஆலோசனைகளையும், தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும் தெரிவித்தனர். அதன்பின் சுகாதாரத்துறை அமைச்சருடன் அரசு மருத்வமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வக்கூட்டத்திற்குப் பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுகாதாரத்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதோடு இந்தத் தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பான மருத்துவ சேவை செய்து கொண்டிருக்கின்றன. தொற்றின் எண்ணிக்கை கூடுதலாக வருவதால் அதிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள், மருந்துகள் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கென்று சிறப்பான முக்கியத்தும் கொடுத்து இந்தத் தொற்று தடுக்க உறுதியாக தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உடனடியாக அமைக்கப்படும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,681 படுக்கைகள் உள்ளன. இதில், 1,176 படுக்கைகள் மட்டமே ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இங்கு மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரிய அளவில் கூட்டம் வருவதால் ஜீரோ டிலே என்ற மருத்துவ சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடனே அவர்களுக்கு சிகிச்சை வசதி வழங்க வசதியாக 150 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. அது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே நடந்துது. தற்போது அது கோவை, திருச்சி, மதுரை போன்ற மற்ற முக்கிய நகரங்களிலும் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்து மதுரைக்கு அதிக நோயாளிகள் வருவதால் கூடுதல் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இரண்டு மூன்று நாட்களில் கூடுதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிகத்திற்கு 7 ஆயிரம் என்ற அளவிலே ரெம்டெசிவிர் மருந்து வழங்குகிறது. ஆனால், தமிழகத்தின் தேவையோ 20,000 என்ற அளவில் உள்ளது.
ரெம்டெசிவிர் கூடுதலாகத் தேவை என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 7 ஆயிரம் மட்டுமே வருகிறது. கூடுதலாக வழங்க தமிழக அரசு கோரிக்கை வைத்தால், அதற்கு மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் அடுத்த மாதம் கூடுதலாகும்போது தருகிறோம் என்கின்றனர்.
இந்தச் சூழலிலும் மதுரைக்கு கூடுதல் ரெம்டெசிவிர் வழங்க மருத்தவத்துறை வழங்க உறுதியளித்துள்ளது. தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்திலேயே ஒரு நிறுவனத்திடம் பேசி இன்று மாலையே ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. தோப்பூர் மட்டுமில்லாது எங்கெங்கு காலியிடங்கள் இருக்கிறதோ அங்கு கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஒருவாரத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஆக்சிஜனைப் பொறுத்தவரையில் நேற்று இரவுதான் ரூர்கேலாவில் இருந்து 80 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதைப் பிரித்து மாவட்டங்களுக்கு வழங்கும் பணிகள் நடக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி என்ற மகிழச்சி வந்த நிலையில் சிறிய அளவிலான உற்பத்தி தொடங்கியபோதே பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
அதை சரி செய்வதற்கு மூன்று, நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீரமையும்.
ஆனால், அதை வரும் வரை காத்திருந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்று கருதி தமிழக அரசு மற்ற நாடுகள், மற்ற மாநிலங்களில் ஆக்சிஜன் வாங்குவதற்கு துரித முயற்சி மேற்கொண்டுள்ளது.
பெரிய அளவிலான பாதிப்பைத் தவிர்க்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. முதல் அலையில் இன்னும் கட்டமைப்பு வசதிகளை செய்திருந்தால் இரண்டாவது அலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
அதனால், இந்த இரண்டாவது அலையில் மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டுள்ளோம்.
முழுஊரடங்கு வெற்றிகரமாக நடக்கிறது. பொதுமக்களுக்கே பயம் வந்துவிட்டது. அவர்கள் ஒத்துழைப்போடு கரோனா கட்டுப்படுத்துவோம். ரெம்டெசிவர் யார் கள்ளச்சந்தையில் விற்றாலும் தவறு.
அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் முழுஊரடங்கு மூலமே கரோனா தொற்று குறைந்துள்ளது.
அதுபோலே 24ம் தேதிக்குள் ஒரளவு மாற்றங்கள் ஏற்படும். மதுரையில் கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வந்தள்ளன. அது எந்த விதித்திலும் சரியானது இல்லை. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.