

புதுச்சேரி அரசு மருந்தகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளது என்பது தவறான தகவல். மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் தெரிவித்தார்.
புதுவையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதப் பிற்பகுதியில் இருந்து, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த மாதம் முதல் வாரத்திலிருந்து நோயாளிகளின் எண்ணிகை உச்சத்தைத் தொட்டது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், புதுவையில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியுள்ளனர்.
படுக்கைகளின் இருப்பைவிட, நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தனியார் நர்சிங் ஹோம்களில் கரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் படுக்கைகளை மேலும் அதிகரிக்க உள்ளதாக, சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (மே 14) கூறியதாவது:
"தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த கரோனா நோயாளிகள் 30 சதவீதம் பேர் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவைக்கேற்ப ஆக்சிஜன் படுக்கைகளை அரசு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம்.
மொத்தமாக 6 ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 4 உற்பத்தி நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. காரைக்காலில் உள்ள ஒரு மையத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
கதிர்காமம் கரோனா மருத்துவமனையில் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தியை 16 டன்னாக உயர்த்தியுள்ளோம். மேலும், கதிர்காமத்தில் தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து இலவசம்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக கரோனா நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் குப்பி எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.
1,000 ரெம்டெசிவிர் குப்பிகள் வந்தடைந்தன. அதேபோல், ரெம்ரெசிவிர் மருந்தை அரசு மருந்தகத்தை அணுகி வாங்கலாம் என்ற தகவல் தவறானது. மத்திய அரசு புதுச்சேரிக்கு ரெம்டெசிவிர் மருந்து தந்துள்ளது. அவை அனைத்து தனியார் மற்றும் ஜிப்மர், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தரப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து யாருக்குத் தரவேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கு ஏற்ப மருத்துவர்கள் தருவார்கள். அரசு மூலம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து இலவசமாகத் தரப்படுகிறது.
இதைக் கண்காணிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி அரசு மருந்தகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு உள்ளது என்பது தவறான தகவல். மக்கள் நம்ப வேண்டாம்".
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் தெரிவித்தார்.