முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Updated on
1 min read

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் திருச்சியில் இன்று அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் விவரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள சாதாரண மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் விவரம், வென்டிலேட்டர் விவரம் ஆகியன குறித்துப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்தப் பிரிவைத் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் பயிலும் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்கள் உடனடியாகப் பணியமர்த்தப்பட உள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவது ஏன்?

தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 7,000 ரெம்டெசிவிர் குப்பிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதில், திருச்சி உள்ளிட்ட சுற்றுப் பகுதி மாவட்டங்களுக்கு 300 குப்பிகள் வழங்கப்படுகின்றன. ரெம்டெசிவிர் பற்றாக்குறையைக் களைய உரிய நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக எடுத்து வருகிறார். இதுகுறித்து மத்திய அமைச்சருடனும் பேசியுள்ளார்.

காந்தி மார்க்கெட் விவகாரத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் பேசி, விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும். மேல புலிவார்டு சாலையில் மரக்கடையில் இருந்து காமராஜர் வளைவு வரை அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை சமூக இடைவெளியுடன் கடைகளை நடத்த அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

முழு ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பது ஆகியவை குறித்து முதல்வர் உரிய முடிவெடுப்பார்.

தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை கிடைக்கிறது. ரெம்டெசிவிர் மருந்து விற்பனை முறைப்படுத்தப்படும். கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. 100 நாட்களில் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் திட்டத்தில் லட்சக்கணக்கான மனுக்கள் வரப் பெற்றன. ஆனால், அந்தப் பணியை தள்ளிவைத்துவிட்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதையே முழுப் பணியாக மேற்கொண்டு வருகிறோம். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கரோனா விரைவில் கட்டுக்குள் வரும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in