தமிழகத்தில் 3 நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை போக்கப்படும்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி

தமிழகத்தில் 3 நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை போக்கப்படும்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி
Updated on
2 min read

‘‘தமிழகத்தில் மூன்று நாட்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போக்கப்படும், ’’ என்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.

மதுரை யாதவர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை இன்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் ‘கரோனா’ தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்களைப் பாதுகாக்கக்கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் தனி வார்டுகள் உருவாக்கவும் ஆலோசிக்கிறோம்.

மதுரையிலே நிதி அமைச்சர் உள்ளார். அதனால், மதுரைக்குத் தேவையான வசதிகளை, அதற்கான நிதி ஒதுக்கீடும் விரைவாகப் பெறப்படும். கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் மதுரையில் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க உள்ளோம், ’’ என்றார்.

நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘‘கரோனா பாதிப்பில் மதுரையில் இன்று இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முதல் அலையை விட மிக அதிகமான தொற்று பாதிப்புகள் மதுரையில் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்றை கட்டுப்படுத்த செய்த பணிகள் போதுமானதாக இல்லை. தற்போதைய பாதிப்புக்கு தேவையான வசதிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்து அதை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.

அலோபதி மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே படுக்கை வசதிகள் அதிகப்படுத்த முடியும்.

இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டில் படித்துவிட்டு நமது நாட்டில் பணியாற்றுவதற்கான தேர்வு (equivalence exam) எழுதாமல் இருப்பவர்களுக்கு தற்காலிக விதி விலக்கு அளித்து பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆக்சிஜன் வசதி, கரோனா பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர், ஆண்டி வைரல் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகமாக உள்ளன.

இதை சமாளிக்க வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்ய முயற்சி செய்துள்ளோம். மேலும், சித்த மருத்துவம், மற்ற பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்த உள்ளோம். இதற்கு மேலாக மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஒரு நாள் கூட நான் முகக்கவசம் இல்லாமல் நான் பிரச்சாரத்திற்கு சென்றதில்லை. அதனால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை வெளியே போகாமல் இருக்க வேண்டும்.

அரசு எத்தனை வசதிகளை உருவாக்கினாலும் கூட மக்கள், ஊரடங்கு விதிமுறைகளை மதித்து மிகுந்த கவனத்துடன் பின்பற்ற வேண்டும். எங்கெங்கு தேவையோ படுக்கை வசதிகளை உருவாக்கிவிடலாம். ஆனால், தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை.

ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனி கண்காணிப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து துரிதமாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 3 நாட்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கிவிடுவோம், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in