Published : 14 May 2021 03:59 PM
Last Updated : 14 May 2021 03:59 PM

இது விலையில்லா உணவு; பசித்தோர் பசியாறலாம்: திண்டுக்கல் ஹோட்டல் உரிமையாளரின் மனிதநேயம்

திண்டுக்கல்  

திண்டுக்கல்லில் உள்ள ஹோட்டல் உரிமையாளர், தனது கடைமுன்பு தினமும் உணவுப் பொட்டலங்களை வைத்து ‘பசியுள்ளோர் இலவசமாக எடுத்துச்செல்லலாம்’, இது விலையில்லாத உணவு, என ஏழைகளின் பசியாற்றிவருகிறார்.

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே முஜிப் பிரியாணி என்ற ஹோட்டலை முஜிபுர்ரகுமான், அவரது சகோதரர் பிலால்ஹூசைன் ஆகியோர் நடத்திவருகின்றனர்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன் பசியால் வாடிய சாலையோரம் வசிப்பவர்கள், உணவு தேவைப்படுபவர்களைத் தேடிச்சென்று இலவசமாக உணவு வழங்கினர்.

கடந்த கரோனா ஊரடங்கு காலத்தில் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை இவர்கள் ஹோட்டலில் தயார் செய்து வழங்கினர்.

இந்த ஆண்டும் கரோனா இரண்டாவது அலை காரணமாக தற்போது தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் சாலையோரம் கடை நடத்துபவர்கள், ஏழை எளியோர் என வருமானத்திற்கு வழியில்லாமல் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், தற்போது முஜிப் பிரியாணி ஹோட்டல் செயல்பட்டுவருகிறது.

பலரும் பணம் கொடுத்து உணவுகளை பார்சல் வாங்கிச்செல்கின்றனர். இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கும் எண்ணம் மீண்டும் முஜிப் சகோதரர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து ஹோட்டல் முன்பு ஒரு டேபிள் அமைத்து அதில் உணவுபொட்டலங்களை வைத்து ‘விலையில்லா உணவு’, பசித்தோர் பசியாறலாம் என்ற வாசங்களையும் வைத்துள்ளனர்.

வருமானத்திற்கு வழியின்றி உள்ளவர்கள், பலர் இவரது சேவையை அறிந்து ஹோட்டல் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்களை உண்பதற்கு எடுத்துச்செல்கின்றனர். இதனால் ஊரடங்கு காலத்தில் பலரின் பசியாறுகிறது.

இதுகுறித்து ஹோட்டல் நடத்தும் சகோதரர்கள் முஜிபுர்ரகுமான், பிலால்ஹூசைன் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் தேடிச்சென்று உதவினோம். இதற்கு பலரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது ஊரடங்கால் பலரும் உணவின்றி தவித்து வருவதை அறிந்து விலையில்லாத உணவு, பசித்தோர் பசியாறலாம் என்ற திட்டத்தை எங்கள் ஹோட்டல் முன்பே துவக்கினோம்.

மக்கள் இதை அறிந்து தங்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்களை எடுத்துச்சென்று பசியாறுகின்றனர். ஒரு நாளைக்கு மாலை, இரவு என 150 உணவு பொட்டலங்களை வைக்கிறோம்.

விலையின்றி இந்த உணவுப் பொட்டலங்களை இலவசமாக எடுத்துச்செல்கின்றனர். உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு நன்றி உணர்வோடு அவர்கள் பார்க்கும் பார்வை, மேலும் பலருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x