

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்காக 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என சிபிஎஸ்இ சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாடப்புத்தகங்கள் தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டு விட்டன. 37 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டிய நெருக்கடியான மாதங் கள். தற்போது மத்திய மனித வளத் துறை அமைச்சகமும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான இயக்குநரகமும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2016 மார்ச் மாதத்தில் முழுஆண்டுத் தேர்வுகளை நடத்த கால அட்டவணை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடங்கள் இன் னும் முடிக்கப்படவில்லை. எனவே ஒன்று தமிழகத்துக்கு மட்டும் பாடத்திட் டத்தை குறைக்க வேண்டும். இல்லை யென்றால் வெள்ள பாதிப்பு மாவட்டங் களுக்கு தனியாக வினாத்தாள் தயா ரிக்க வேண்டும். அதற்கும் சாத்திய மில்லை என்றால் முழு ஆண்டுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஎஸ்இ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங் களில் வேலை நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரமும், ஞாயிறு விடுமுறை அன்றும் பள்ளிகளைத் திறந்து பாட திட்டத்தை முடிக்கக் கூறியுள்ளோம். நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வுகள் நடத்தப்படுவதால், தமிழகத்துக்கு மட்டும் தனியாக தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை” என கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து நீதிபதிகள் தங் களது உத்தரவில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான அளவு கோலை கையாளுவதால் தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என சிபிஎஸ்இ கூறுகிறது. தமிழக மாணவர்கள் கடினமான சூழலில் இந்த தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர். எனவே அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.