

புதுச்சேரியில் கரோனா தொற்று கடந்த ஒரு மாதத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரே மாதத்தில் 401 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மீது அரசு நிர்வாகத்தினர் தனிக் கவனம் செலுத்தினால் பாதிப்பைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 3,032 ஆக மொத்த கரோனா பாதிப்பு, மே 14ஆம் தேதியான இன்று 17,424 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 9,148 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 1,580, காரைக்கால் - 224, ஏனாம் - 152, மாஹே - 18 பேர் என மொத்தம் 1,974 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், புதுவையில் 24 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 2 பேர் என 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் ஆவர். இதில் 15 பேர் 60 வயதுக்குக் குறைவானவர்கள். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று கடந்த ஏப்ரல் 14 முதல் மே 14 வரையிலான ஒரு மாதத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரு மாதத்தில் 401 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துச் சுகாதாரத் துறை தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 80,947 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 520 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 369 பேரும், கோவிட் கேர் சென்டரில் 738 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 15,297 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 17,424 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1088 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 62,424 (77.12 சதவீதம்) ஆக உள்ளது" என்று குறிப்பிட்டனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரைக் கண்டுகொள்ளுமா அரசு?
புதுச்சேரியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 15,297 ஆக உள்ளது. அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரை அரசுத் தரப்பில் கண்டுகொள்வதே இல்லை. வீடுகளில் இருப்போரை சிகிச்சைக்கு உட்படுத்துவதும் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சைக்கு இவர்களை உட்படுத்தினாலே இறப்பு எண்ணிக்கை குறையும். இறுதிக் கட்டத்தில் அவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டியிருக்காது" என்று குறிப்பிட்டனர்.
மேலும் பலரோ, "கரோனா தொற்றுக்கு உள்ளாகி பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களில், அவர்களுக்குச் சத்தான உணவு கிடைக்காததும் நிலைமை விபரீதமாகக் காரணம். தேவைப்படும் குடும்பங்களுக்கு அரசு உணவை விநியோகம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.