Published : 14 May 2021 01:42 PM
Last Updated : 14 May 2021 01:42 PM

கரோனா தடுப்பூசி போடும் பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கால் கரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த 15 மாதங்களில் தொடக்கத்தில் கரோனாவின் முதல் அலையை எதிர்கொண்டோம். அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இரண்டாவது அலையின்போது, குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகிறார்கள்.

நேற்று நிலவரப்படி, 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலை மயானங்களில் எரிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள். மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய கோர நிலையில், அடிக்கடி மனம் திறந்து பேசுகிற பிரதமர் மோடியைப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசு செயல்படுகிறதா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

நகர்ப்புறங்களில் பரவிய கரோனா தொற்றின் தாக்கம் கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து பிஹார் வரை கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன. மூன்றாவது அலை சிறார்களைப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்கிறபோது, நெஞ்சம் பதைபதைக்கிறது. எதுவுமே நிரந்தரம் இல்லை, எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம் என்ற நிச்சயமற்ற தன்மை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

கடந்த மே 11ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 18 கோடி தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. இதில் ஒரு டோஸ் போட்டவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள்தொகையில் 19 சதவிகிதம். இதில் 2 டோஸ்கள் போட்டவர்கள் 4 சதவிகிதம் மட்டுமே.

இந்நிலையில், மீதியிருக்கிற 80 சதவிகித மக்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தடுப்பூசிகள், ஆக்சிஜன், கரோனா பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றைப் பாரபட்சம் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய மத்திய அரசு, இப்பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்துவிட்டு நழுவிவிட்டது மிகப் பெரிய துரோகமாகும்.

அம்மை, காலரா, போலியோ போன்ற கொள்ளை நோய்களை ஒழிப்பதற்காகத் தடுப்பூசி போடுகிற திட்டத்தைக் கடந்த காலத்தில் மத்திய அரசுகள்தான் செய்து வந்தன. ஆனால், பிரதமர் மோடியோ அந்தப் பாதையிலிருந்து முற்றிலும் விலகி, அதை மாநிலங்களிடம் ஒப்படைத்தது மனிதாபிமானமற்ற செயலாகும்.

இரண்டாவது அலை குறித்து நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஆனால், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டதாக மோடி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்.

விலைமதிப்பற்ற தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியபோது மோடியும் அமித் ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார்கள்.

லட்சக்கணக்கானோர் பங்கேற்க கும்பமேளாவுக்கு அனுமதி வழங்கி கரோனா பரவலை அதிகப்படுத்தினார்கள். அதன் பின்னர், கரோனாவால் ஏற்பட்ட மரணம் மற்றும் பேரழிவின் சோகக் காட்சிகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு மோடியை இரக்கமற்றவர் எனக் குற்றம் சாட்டியதையும் சமீபத்தில் பார்த்தோம்.

மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்கச் சொல்லிய மத்திய அரசு, அதற்கான செயல்முறையை வகுக்கவில்லை. நாடு முழுவதும் தடுப்பூசிக் கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது.

29 மாநிலங்களும் 2 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும்போது, போட்டியை அதிகப்படுத்தி வணிகமயமாக்கி லாபம் பார்க்க நினைக்கின்றனர். இரண்டே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஏகபோக உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அவர்களைக் கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. இத்தகைய அவல நிலையை சுதந்திர இந்தியா இதுவரை கண்டதில்லை.

இந்தியா முழுவதுக்கும் பொதுவான அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் கொள்முதல் செய்து, பாதிப்புக்கு ஏற்றாற்போல் தடுப்பூசி மருந்துகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஆகியவற்றை சமநிலைத் தன்மையோடு விநியோகிக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியோ பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

இன்று மிகமிக மோசமான நிலையை நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலையில் இன்றைக்குப் பிரதமர் மோடி இருக்கிறார். மக்கள் உயிரைக் காப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுகள் தலையில் சுமையை ஏற்றாமல், மத்திய அரசே நாடு முழுவதும் இலவசமாகத் தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளை வழங்க வேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவுக்கு நல்லது.

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கரோனா எனும் கொடுந்தொற்றில் கொத்துக் கொத்தாக மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும்போது, பிரதமருக்கு 13 ஆயிரம் கோடியில் வீடு அவசியமா? ரூ.20 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா?

நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக பலி கொடுத்துவிட்டு, அம்பானியும் அதானியும் சொத்து குவிப்பதற்காக ஆட்சி நடத்தப் போகிறீர்களா? மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கால் கரோனா நடவடிக்கையில் உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x