

ஊரடங்கு எதிரொலியால் மதுரையில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது கரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வர சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இஸ்லாமியர்களின் அடிப்படைக் கடமைகளில் 3-வது கடமையான ரமலான் மாதம் உண்ணா நோன்பினை 30 நாட்கள் கடைப்பிடித்த இஸ்லாமியர்கள் நேற்று ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரமலான் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு எதிரொலியாக இஸ்லாமியர்கள் வீடுகளிலயே தொழுகை நடத்திக்கொள்ள தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அதிகாலையில் எழுந்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ஏழை, எளியோருக்கு பித்ரா என்னும் உதவிகளை வழங்கிய பின்னர் புத்தாடைகளை அணிந்து அவரவர் வீடுகள் மற்றும் மாடிகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகையின்போது அரசு அறிவுரையைப் பின்பற்றி போதிய தனிமனித இடைவெளியுடனும், முகக் கவசங்களை அணிந்தும், கைகளை சோப்பால் கழுவிய பின்பும் தொழுகையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தொழுது முடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஆனையூர், மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு திருமங்கலம், சிலைமான், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மேலும், உறவினர்களுக்கு அலைபேசி மூலமாகவும் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
சிறப்புத் தொழுகையைத் தொடர்ந்து கரோனா தாக்கத்தில் இருந்து உலகம் மீண்டு வரவும், உலகம் அமைதிபெற வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், ஏழை எளியோர்கள் வாழ்வாதாரத்தில் மீண்டுவர வேண்டும் எனவும் சிறப்பு துஆ செய்துகொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்பாகவும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.