Published : 14 May 2021 11:34 AM
Last Updated : 14 May 2021 11:34 AM

கரோனா; 'மீண்டும் ஒன்றிணைவோம் வா'- முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம்

கரோனா பேரிடர்க் காலத்தில், முதல் அலையின்போது மேற்கொண்ட ''ஒன்றிணைவோம் வா'' இயக்கப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். களப் பணியாற்றி மக்களின் கண்ணீரைத் தடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதம்:

''நம் உயிருடன் கலந்திருக்கும் 'கலைஞரின்' அன்பு உடன்பிறப்புகளுக்குத் தமிழக முதல்வர் என உங்கள் அன்பால் பொறுப்பேற்றுக் கொண்ட உங்களில் ஒருவன் எழுதும் வேண்டுகோள் மடல்.

தமிழ்நாட்டு மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்ற தோழமைக் கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கொண்டாட்டத்திற்குரியதாக அமையவில்லை. காரணம், கரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கத்தால் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக்கிறது. அது மக்கள் மனங்களில் அச்சத்தை விளைவிக்கின்ற காரணத்தால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

மே 7-ம் நாள், நம் தலைமையில் அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உயரதிகாரிகளும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் மக்கள் நலன் காப்பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.

பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி

முதல்வர் என்ற முறையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்திற்குத் தருகிறோம் என உறுதியளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார் பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, டிவிஎஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை 18 கோடி ரூபாய் மதிப்பிலான 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, மக்களின் உயிர் காத்திட உதவியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுவதில் உயிரனைய தலைவர் 'கலைஞரின்' உடன்பிறப்புகளான நீங்கள் எப்போதுமே முன்கள வீரர்களாக நிற்பவர்கள். கரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியான ஊரடங்கினால் எளிய மக்களும் - மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நெருக்கடிக்குள்ளான நிலையில், திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதவி எண் (Helpline) வழங்கப்பட்டு, அதற்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் கட்சியினர் ஆற்றிய அரும்பணி பலருக்கும் பேருதவியாக இருந்தது.

திமுக மருத்துவர் அணி சார்பிலும் முழுமையான அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ முகாம்கள், முகக்கவசம் - சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் எனக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய- நகர - பேரூர் கிளைக் கழகச் செயலாளர்கள், திமுகவின் ரத்த நாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவருமே தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

தங்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து இருந்தும் இயன்ற அளவு பாதுகாத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவிய தொண்டுள்ளத்தை உங்களில் ஒருவனான நான் என்றும் மறக்க மாட்டேன். மக்கள் பணியில் நம் கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் - சட்டப்பேரவை உறுப்பினருமான சகோதரர் ஜெ.அன்பழகன் தன் இன்னுயிர் ஈந்ததை யாரால்தான் மறக்க முடியும்! அந்த அளவுக்குப் பேரிடர் காலத்தில் திமுகவின் களப்பணி அமைந்திருந்தது.

மக்கள் தொண்டாற்றுவதே முதல் பணி

சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, கரோனா இரண்டாவது அலை குறித்த எச்சரிக்கையினை மருத்துவர்கள் தெரிவித்தபோதும், ‘ஆட்சி அமையட்டும்‘ என்று காத்திராமல், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் தொண்டாற்றுவதே திமுகவின் முதல் பணி என்ற அடிப்படையில், உங்களில் ஒருவனான நான் வைத்த வேண்டுகோளை ஏற்று கபசுரக் குடிநீர்- முகக்கவசம் - சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி, மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

நம் அரசு அமைந்தபிறகு, கரோனா பரவலைத் தடுப்பதற்கும் பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்கும் தெளிவான - உறுதியான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணமாக இரண்டு தவணைகளில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி என கரோனா கால நடவடிக்கைகளைச் சரிசெய்து, மக்களின் உயிர் காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களும், திமுகவின் அனைத்து நிர்வாகிகளும், செயல்வீரர்களும், திமுக தொண்டர்களும் களப்பணியாற்றி இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை - அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

1967-ஆம் ஆண்டு முதன்முதலாக திமுக ஆட்சி, அண்ணா தலைமையில் அமைந்தபோது, ‘சீரணித் தொண்டர் படை’ என்ற அமைப்பை உருவாக்கினார். மக்களுக்கு உதவிடும் வகையிலும் அரசுக்குத் துணையாக இருந்திடும் வகையிலும் செயல்படுவதே சீரணித் தொண்டர் படையின் பணியாக இருந்தது. அத்தகையப் படையினரைப் போலப் பேரிடர் காலத்தில் திமுகவினர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும்.

கட்சியினர் களப் பணியாற்றிட வேண்டும்

கரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க, மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம் என ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் முதற்கட்டமாக, கட்சியினர் களப்பணியாற்றிட வேண்டுகிறேன். குறிப்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்.

திமுகவினர் எப்போதும் போலக் களப்பணியாற்றுவதுடன், நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகக் கூடுதல் பொறுப்புடனும் - தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பேரிடர்க் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் எனவும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளைப் போலவே களத்தில் இருப்பேன்.

களப் பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்.

ஒன்றிணைவோம் வா... பேரிடர்க் காலத்தை வென்றிடுவோம் வா''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x