Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

அனைத்து மத சகோதரத்துவம் என்றும் நீடித்திருக்கட்டும்: ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருநாள் நம் வாழ்வில் ஆரோக்கியம், அமைதி, வளம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மெய் வருத்தி நோன்பு நோற்கும் அனைத்து முஸ்லிம் உள்ளங்களுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: முஸ்லிம் மக்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். அனைத்து மத சகோதரத்துவம் என்றும் நீடித்திருக்கும் வகையில் இந்த பெருநாள் அமையட்டும். அனைவரும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு திமுக என்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்நாளில் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: முஸ்லிம் பெருமக்களுக்கு ரம்ஜான்வாழ்த்துகள். சகோதரத்துவம்குறித்து நபிகள் நாயகம் எடுத்துரைத்துள்ளதைப் பின்பற்றி வாழஅனைவரும் உறுதியேற்போம். கரோனா பேரிடரில் மக்கள் பலரும் அல்லல்பட்டு வரும் இந்த சூழலில் நம் அன்பு, ஈகையை அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கரோனா பாதிப்பு காலத்தில் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு சேவைப் பணிகளை மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சகோதரத்துவத்தை போற்றும் அவர்களது சேவை என்றும் நினைவுகூரப்படும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கரோனாவின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மனநிறைவுடனும் வாழவும் வேண்டி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வாழும் மக்களிடம் அன்பு, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, ஒற்றுமை,முன்னேற்றம், மகிழ்ச்சி தழைக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: இந்த நன்னாளில் நம்மைச் சுற்றியுள்ள கரோனா நோயில் இருந்து எல்லோரையும் காப்பாற்றி அருள்புரிய இறைவனிடம் வேண்டுவோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: உடல் மற்றும் உள்ளத்தை தூய்மைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் ஏதுவான வாழ்வியல் நெறிகளைத்தான் இஸ்லாம் வலியுறுத்திவருகிறது. அவற்றை பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் அனைவரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகள்.

தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: கரோனா பரவலைத் தவிர்க்க தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்ற வேண்டும். இந்த திருநாளில் இவ்வுலகம் கரோனாவில் இருந்து விடுபடவும், அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்படவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:வருங்காலங்கள் நோயற்ற ஆண்டாக திகழ்ந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். முஸ்லிம் மக்களுக்கு மனம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள்.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: நபிகள்போதித்த அன்பு, ஈகை, மனிதநேயம், கோபம் தவிர்த்தல் போன்றநற்பண்புகள் வழியாக சிறந்த மனிதசமுதாயத்தை அமைக்க உறுதியேற்போம். அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், சமக தலைவர் சரத்குமார், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தவாக தலைவர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சிதலைவர் என்.ஆர்.தனபாலன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய தேசிய லீக் மாநிலத்தலைவர் முனிருத்தீன் ஷெரீப், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, பாப்புலர் ஃப்ரன்ட் மாநிலத் தலைவர் எம்.முகம்மது ஷேக் அன்சாரி உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x