

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பல்லாவரம் உதவி காவல் ஆணையர் ஈஸ்வரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல்வேறு நிபந்தனைகளுடன் மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியில் சென்று வருகின்றனர். மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அரசின் உத்தரவுகளை மக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் நாடு முழுவதும் காவல்துறையினர் இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் (52) கரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கும் சம்பவம் சென்னை பெருநகர காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரோனா தொற்று அறிகுறிகளுடன் சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈஸ்வரன் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடன் பணியாற்றிய போலீஸார் கூறியதாவது: உதவி ஆணையர் ஈஸ்வரன் வாக்குஎண்ணிக்கைக்கு முன்பே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது ஈஸ்வரனுக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு அதிகமாக இருந்ததால், மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில்,உடனே கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்களை பாதுகாக்கவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் காவல் துறையைச் சார்ந்த நாங்கள் இருக்கிறோம். ஆனால், எங்களை பாதுகாப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. உயரதிகாரிக்கே இந்தநிலை என்றால் சாதாரண காவலர்களாக இருக்கும் எங்களுக்கு என்ன ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கரோனாவால் உயிரிழந்த காவல்உதவி ஆணையர் ஈஸ்வரன் 2 தவணை தடுப்பூசி செலுத்திகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.