

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் தொற்று என்று வருபவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றுக்கு மட்டும் மருந்து அளித்துவிட்டு மூச்சுத் திணறல் வரும்போது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். அதுபோன்று அனுப்பப்பட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் குறைந்தபட்ச ஆக்ஸிஜன் வசதியை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு, சிகிச்சை அளிக்க தேவையான அடிப்படை வசதிகளை வைத்துக் கொண்டுதான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்க காலத்தில் ரெம்டெசிவிர் மருந்து உதவும். 4, 5 நாட்களுக்கு பிறகு போடுவதால் பயனில்லை. எனவே, ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே, மோகன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.