Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

ஆம்புலன்ஸில் வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை அதிகரிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கரோனா தொற்று சிகிச்சை குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி., நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிக்கு ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்பட்டார். இதனை கண்ட அவர்கள் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்க கோரி, சுமார் 15 நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்து நோயாளிக்கு ஆக்சிஜன் பொருத்த ஏற்பாடு செய்த பின்னரே அங்கிருந்து சென்றனர். மருத்துமவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர். படம்: க.பரத்

சென்னை

ஆம்புலன்ஸ் மூலம் வருபவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வசதியாக, ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்

படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசுமருத்துவமனையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

படுக்கை வசதி கொண்டபேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும்.

ஆம்புலன்ஸில் வருபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 160 படுக்கைகள் உள்ளன. இது 280-ஆக உயர்த்தப்படும். கரோனா பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊரடங்கை முழுமையாக பின்பற்றினால், இந்த மாதத்துக்குள் கரோனாவை ஒழித்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், 754 கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 45,200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது.

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தினமும் ரூ.30 லட்சம் செலவில் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு வழங்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

இத்திட்டத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அமைச்சர் சேகர்பாபு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 160 படுக்கைகள் உள்ளன. இது 280-ஆக உயர்த்தப்படும். கரோனா பரிசோதனைகளை உடனுக்குடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x