தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்: ஊரக தொழில் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரத்தில் கரோனா பரிசோதனை செய்வதற்கான வாகனத்தை தொடங்கி வைக்கிறார் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
காஞ்சிபுரத்தில் கரோனா பரிசோதனை செய்வதற்கான வாகனத்தை தொடங்கி வைக்கிறார் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள படுக்கைகளில் 50 சதவீதத்தை கரோனா சிகிச்சைக்காக வழங்க வேண்டும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாதடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டஆட்சியர் மகேஸ்வரி முன்னிலைவகித்தார். ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று பேசியது:

தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 50 சதவீதத்தை கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்காக ஒதுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சில தராமல் உள்ளன. அத்தகைய மருத்துவமனைகளிலிருந்து படுக்கைகளை அரசுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் எடுப்பார்.

பொதுமுடக்கம் உள்ள நேரத்தில் விபத்துகள் அதிகம் இருக்காது. எனவே 108 அவரச ஊர்திகளை கரோனா சிகிச்சை பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று ஓரளவுக்கு குணமடைந்தவர்களுக்கு பொது வார்டுகளை உருவாக்கி கண்காணிக்க உள்ளோம். கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும். இந்த பொதுமுடக்கம் முடிவதற்குள் மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க விரைவில் அரசு உத்தரவு வர உள்ளது. காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் கரோனாவுக்கான சித்த மருத்துவப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது 10 நாட்களில் செயல்படத் தொடங்கும்.

நீராவி பிடிப்பதன் மூலம் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே, வீட்டில் எளிமையான முறையில் நீராவி பிடிக்கும் பழக்கத்தை மக்கள் மேற்கொள்ளலாம் என்றார்.

இந்தக் கூட்டத்துக்கு முன் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் நடமாடும் மாதிரி சேகரிப்புவாகனத்தையும் ஊரக தொழில் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (ம) காவல்துறை தலைவர் (பயிற்சி) மு.சி.சாரங்கன், காவல்துறைதுணைத் தலைவர் பா.சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா, மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வப்பெருந்தகை, உதவி இயக்குநர் (பேரூராட்சி) குருராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in