

புதுச்சேரியில் முதற்கட்டமாக 12 தொகுதிகளில் வரும் 17-ம் தேதி முதல் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கரோனா கால இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குநர் கங்காபாணி வெளியிட்டிக்கும் செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவி வரும் சூழலில் மத்திய அரசு உத்தரவின் பேரில் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளுக்கும் மத்திய உணவு பாதுகாப்புத் திட்ட பயனாளிகளான சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு மே மற்றும் ஜூன் மாத காலத்துக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் இரு மாத காலங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி தரப்பட உள்ளது.
வரும் 17-ம் தேதி முதல் ஏம்பலம்,இந்திராநகர், காலாப்பட்டு, கதிர்காமம், லாஸ்பேட்டை, மணவெளி, மங்கலம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், ஊசுடு, தட்டாஞ்சாவடி, வில்லியனூர் ஆகிய 12 தொகுதிகளுக்கு கடந்த முறை தரப்பட்ட அதே பள்ளி மற்றும் மையங்களில் அரிசி விநியோகிக்கப்படும். இதர தொகுதிகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு, அரிசி விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.