

கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும் என மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவுறுத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவிலும், விருதுநகர் விவிவி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலும், மருத்துவத்துறை அரசு மருந்து குடோனில் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட் வார் அறையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். கரோனா நிவாரண நிதியாக அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ.2 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசுகையில், இறப்பு எண்ணிக்கை சரியாக தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே கரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்போதுதான் பாதிப்பின் நிலை தெரியும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதிய அளவு இருக்க வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ளோரால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே, வீடுகளில் தனிமையாக சிகிச்சை பெறுவோரை கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர்.