

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள சீற்றத்தின் பின் விளைவுகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. 30,000 பேர் நிவாரண முகாம்களில் இருக்கின்றனர். 71 அரசு நிவாரண முகாம்களில் 1.25 லட்சம் மக்கள் உணவு பெற்று வருகின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் நிவாரணப் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது. நோய் தடுப்பு, மீள் குடியமர்த்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், கடலூரில் இன்னமும் நிறைய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். கடலூர் ஜோதி நகர், சூர்யா நகர், ராகவேந்திரா நகர், ஞானாம்பாள் நகர் பகுதி மக்கள் வெள்ள நீர் வடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
கடலூருக்கு தடையின்றி நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது சீர்படுத்தப்பட்டாலும் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட உட்பகுதிகளில் மக்கள் இன்னமும் அடிப்படை உதவிகள்கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
கடலூர் கிராமப்புற மக்களுக்கு மிகப் பெரிய இளைப்பாறுதாலாக அமைந்திருக்கிறது மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மீண்டும் துவக்கியுள்ளது. தேங்கிய நீரை வெளியாற்றுவது, துப்புரவுப் பணிகள் போன்ற வேலைகளை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறும்போது, "ஒவ்வொரு பகுதியிலும் 200 பேருக்காவது வேலை வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகையை பயணாளிகள் அதி முக்கிய செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்றார்.
செவ்வாய்க் கிழமையைப் பொருத்தவரை கடலூரில் மிதமான அளவே மழை பெய்ததாகவும், நீர்நிலைகளில் நீரின் அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.