Last Updated : 13 May, 2021 08:55 PM

 

Published : 13 May 2021 08:55 PM
Last Updated : 13 May 2021 08:55 PM

கரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிகள்: மாவட்ட எஸ்.பி. பாராட்டு

திருப்பத்தூரைச் சேர்ந்த சிறுமிகள் கடந்த ஓர் ஆண்டாக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக எஸ்.பி.விஜயகுமாரிடம் இன்று வழங்கினர்.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இதில், சில மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது உயிரையும் பணயம் வைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனர். கரோனா 2-வது அலையால் தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்காக மருத்துவச் செலவுக்கு தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும்.

வசதிப்படைத்தவர்கள், தன்னார்வலர்கள், புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்பேரில், ஏராளமான மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த குமார் - சுதா தம்பதியின் மகள்களான அர்ஷீதா (7), சந்தியா ஸ்ரீ (5) ஆகியோர் கடந்த ஓர் ஆண்டாக பெற்றோர் கொடுத்த செலவுப் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தனர். அந்தப் பணத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க சிறுமிகள் முன் வந்தனர்.

இதைதொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமாரை நேரில் சந்தித்த அர்ஷீதா, சந்தியாஸ்ரீ ஆகியோர் தங்களது பெற்றோர் முன்னிலையில், தாங்கள் ஓர் ஆண்டாக உண்டியல் சேமித்து வந்த தொகை 1,095 ரூபாயை வழங்கினர்.

சிறுமிகளின் இந்த செயலுக்கு எஸ்பி. விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். சிறுமிகளின் தந்தை குமார் திருப்பத்தூர் நகரில் சிகை அலங்கார நிபுணராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x