Published : 13 May 2021 08:37 PM
Last Updated : 13 May 2021 08:37 PM

முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்தினம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, சின்னதுரை, மதிமுக சார்பில் பூமிநாதன், சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமச்சந்திரன், மாரிமுத்து, மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேகா சார்பில் ஈஸ்வரன், தவாக சார்பில் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

முதல்வர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தத்தம் கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு:

தீர்மானம் 1:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு நல்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2:

நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் இக்காலக்கட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகள் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3:

நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதால், கள அளவில் அனைத்துக் கட்சியினரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைபிடித்திடுமாறு மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4

நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலம எனத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 5:

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x