

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,934 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் நோயாளிகள் தடையின்றி கரோனா சிகிச்சைப் பெற போர்க்கால அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிகமாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், குணமடைந்து வீடு திரும்புவோர் அதில் பாதியாக இருப்பதால் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற படுக்கை வசதி கிடைக்காமல் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் அலையில் மதுரையில் சில வாரங்கள் மட்டுமே கரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு நூற்றுக்கும் கீழாக பாதிப்பு குறையத் தொடங்கியது.
நோயாளிகளுக்கு தற்போது போன்று மூச்சுதிணறல் வரவில்லை. சிலருக்கு மட்டுமே மூச்சுத்திணறல் வந்தது. மற்றவர்கள் சாதாரண படுக்கைகளிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
ஆனால், தற்போது பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்த் தாக்குதல் தீவிரமடைந்ததும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு நோயாளிகள் சிகிச்சைப்பெற முடியவில்லை.
அதுபோல், மருத்துவமனைகளிலும் சாதாரண படுக்கைகளில் அட்மிட் ஆக முடியவில்லை. அதனால், ஆக்சிஜன் படுக்கைகள் தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், மதுரையில் ஒட்டமொத்தமாக அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் 1,934 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,100 ஆக்சிஜன் படுக்கைகளும், தோப்பூர் அரசு காசவோய் மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் சொற்ப எண்ணிக்கையிலே ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அதனால், அரசு மற்றும் தனியார் மருத்துமவனைகளில் நோயின் தீவிரத்திற்கு தகுந்தார்போல் ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கும் நிலை மாறி அதற்காக வரிசை முறை கடைபிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர். நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்தால் காப்பாற்றிவிடாலம். ஆனால், மதுரையில் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதியில்லை.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள் ஒய்வின்றி சிரமப்படுகிறார்கள். மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்ட்டுள்ளது. அதனால், மதுரையில் உள்ளூர் நோயாளிகள் மட்டுமில்லாது வெளியூர் நோயாளிகளுக்கும் சேர்த்து ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதல் அலையில் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டன. தனியார் மருத்துவமனைகள் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தவிர கரோனா உள்ளிட்ட மற்ற சிகிச்சைகள் நடக்கவில்லை.
பல மருத்துவமனைகள் மூடப்பட்டன. கடைசி கட்டத்தில்தான் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. அதுவும், ஆக்ஸிஜன் இல்லாத படுக்கை வசதிகளிலேயே அந்த சிகிச்சை தொடர்ந்தது. ஆனால், தற்போது கரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதி அத்தியாவசியமாகிவிட்டது.
ஆனால், தனியார் மருத்துமவனைகளில் சொற்ப ஆக்சிஜன் படுக்கை வசதிகளே உள்ளன. ஆனாலும், நோயாளிகள், தனியார் மருத்துமவனைகளில் சிகிச்சைக்காக காத்திருப்பு முறையில் வரிசையில் நிற்கின்றனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,200 படுக்கை வசதிகள் இருந்தாலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவதால் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனால், தென் மாவட்டங்களுக்கும் சேர்த்து மதுரையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதோடு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களை கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டியது அவசியமானது, ’’ என்றனர்.