

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கரோனா வைரஸை தடுப்பதற்காக கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (Unified Command Centre) மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவற்கும் நிர்வாகத்தை வெற்றிக்கரமாக செயல்படுத்துவதற்கும் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் 11பிரிவுகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் பிரிவில் பரிசோதனை நோய் கண்டுப்பிடிப்பு, மற்றும் கட்டுப்பாட்டு பகுதி அமைந்துள்ளது. இப்பிரிவு மூலம் அரசு மற்றும் தனியார் ஆய்வகத்தின் பெறப்பட்டதொற்று நோயாளிகளின் வரிசையினை 10 வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி சிகிச்சை மேற்கொண்டதை உறுதி செய்திட வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் உள்ளவரிடம் மாதிரிகள் எடுத்ததை உறுதி செய்ய வேண்டும். அரசு விதிமுறைகளின் படி நகர மற்றும் கிராமப்பகுதிகளிலும் கட்டுப்பாட்டு பகுதி அமைத்திருப்பதை உறுதி செய்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2-வது பிரிவில் நோயாளிகளின் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு பிரிவு அமைந்துள்ளது. இம்மையத்தின்மூலம் கரோனா சிகிச்சை மையம் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நோயின் தீவிரத் தன்மையை விளக்கி அவர்களைக் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-வது பிரிவில் நோயாளிகள் படுக்கை ஓதுக்கிடு மற்றும் பிராணவாயு இருப்பு கண்காணிப்பு பிரிவு அமைந்திருக்கும். இம்மையத்தின் மூலம் மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் படுக்கை இருப்பு மற்றும் பயன்பாடு விபரத்தினை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் பிராணவாயு தினமும் இருப்பு, பயன்பாடு மற்றும் தேவை விபரத்தினை கண்காணிக்கப்படுவதோடு அறிக்கையை உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவும் , படுக்கை பயன்பாடு மற்றும் காலியாக உள்ள படுக்கை விபரத்தினை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கோவிட் -19 நோயாளி படுக்கை விபரத்தினை இணையத்தளத்தில் காலையிலும் மற்றும் மாலையிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல் தகவல் பகுத்தாய்வு மற்றும் அறிக்கை பிரிவு, தடுப்பூசி மற்றும் செயல்படுத்தும் பிரிவு, 9 அபராத தொகையை சம்மந்தப்பட்ட துறைகள் வசூலிப்பதை கண்காணிக்கும் பிரிவு, தொலைப்பேசி வாயிலான ஆலோசனை பிரிவு, துணை சேவை பிரிவு, வட்டார அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் கண்காணிப்பு பிரிவு, மருத்துவ உபகரண மற்றும் போக்குவரத்துப் பிரிவு, செய்திகள் கண்காணிப்பு பிரிவு, நிர்வாக பிரிவு என்று பல்வேறு பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் இம்மையத்தை சிறப்பாக செயல்படுத்தி கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜனனி சௌந்தர்யா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரவணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் அமிர்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.